செயல்திட்டக் குறிக்கோள்கள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பயிலும் மாணாக்கர்கள் நலன் கருதி அவர்களின் உயர்கல்விக்கான நூல்களைத் தமிழில் வழங்குவதற்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் மொழிபெயர்ப்பு மற்றும் அசல் தமிழ் நூல்களை வெளியிடும் நோக்கில் 1961ல் உருவாக்கப்பட்ட ‘தமிழ் வெளியீடுகள் அமைப்பு’, 1961 முதல் 1980 வரை உயர்கல்வி தொடர்பான 1016 நூல்களை வெளியிட்டுள்ளது. இது பொறியியல், மருத்துவம், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், உளவியல், மானுடவியல், அரசியல், வேதியியல், புவியமைப்பியல், புள்ளியியல், சட்டவியல், வணிகவியல், கூட்டுறவியல், வங்கியியல், வானியல், தமிழ், வரலாறு, மொழி, கல்வி உள்ளிட்ட 32 பாடத்தலைப்புகளின் கீழ் இந் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அமைப்பு ‘தமிழ் வெளியீட்டுக் கழகம்’, ‘கல்லூரி நூல் வெளியீட்டு இயக்குநரகம்’, ‘தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்’ ஆகிய பெயர்களில் இயங்கி ‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்ப்பணிகள் கழகம்’ (Tamil Nadu Text Boook & Educational Services Corporation) என்ற பெயரில் இயங்கி வருகிறது.

மேலும், கழகம், முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பல்வேறு பாடத்தலைப்புகளில் தேவைக்கேற்பப் பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணியுடன் விலையில்லாக் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் கல்வி உபகரணங்களையும் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. அத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்ககத்துக்குத் தேவையான துணை நூல்கள், செயல்வழிக் கற்றல் திறன் அட்டைகள் போன்ற கற்றல்சார் வெளியீடுகளையும் கேட்புக்கேற்ப அச்சிட்டு வழங்கிவருகிறது. பாடப்புத்தங்களை இணையதளம் மூலம் விற்கும் சேவையும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ள, கேட்புக்கேற்ப சிறப்பு வழிகாட்டிக் கையேடுகளை அச்சிட்டு வழங்குகிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சமூக நலத்துறை, வருவாய் துறை, தேசியப் பங்குச் சந்தை ஆகிய துறைகளுக்கும் முகமைகளுக்கும் பாடத்திட்டங்கள் தொடர்புடைய புத்தகங்களைக் காலத்தே அச்சிட்டு வழங்கி வருகிறது. பிற மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் தமிழ்ப்பாட நூல்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது.

தவிரவும், கல்லூரி மாணாக்கர்களுக்கும் வாசிப்புப் பழக்கம் உடைய மக்களுக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கழகத்தின் பணிகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கெனப் புதிதாக வெளியீட்டுப் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

  • 32 மாவட்ட மைய நூலகங்கள் உட்பட 352 அரசு நூலகங்களுக்கு வாசகர்களின் தேவைக்கேற்ப போதிய நாளிதழ்கள், பருவ இதழ்களை அணுகும்வகையில் அத்தகைய இதழ்களை "குறைந்த செலவில் சிறந்த நூலகச் சேவை" என்ற நோக்கில் ரூ. 1.024 கோடி மதிப்பிலான நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களைப் பொது நூலக இயக்ககம் வாயிலாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
  • அண்ணா நூற்றாண்டு நூலக வாசகர்களின் தேவைக்காகவும், குடிமைப்பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவவும் சர்வதேச அளவிலான புத்தகங்கள், பல் துறை பருவ இதழ்கள் வாங்கக் கழகம் சார்பில் ரூ1.295 கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பல்வேறு பல்கலைக்கழகங்கள் தயாரித்துள்ள பாடத்திட்டங்களின்படி உயர்கல்வி நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
  • சட்டம், மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், யோகா, சித்தா,ஆயுர்வேதம், மீன்வளம், உடற் கல்வியியல், கால்நடை, வேளாண்மைத் துறைகளில் உள்ள ஆங்கில வழிப் பாடநூல்களைத் தமிழாக்கம் செய்து அந்தந்தத் துறைகளுக்கு ஏற்பவும் மாணவர்களுக்கேற்பவும் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விவசாயம் சார்ந்த பாடப்பிரிவில் 24 புத்தகங்களைக் கழகம் வெளியிட உள்ளது.
  • கழகம் சார்பில் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ள 1016 நூல்களில் இருப்பில் உள்ள அனைத்து நூல்களும் POD முறையில் மறு அச்சு செய்து வெளியிடப்பட உள்ளன.
  • கழகம் இதுவரை வெளியிட்டுள்ள புத்தகங்களில் பல புத்தகங்களைத் தொடர்புடைய வல்லுநர்கள் உதவியுடன் தெரிவுசெய்து மறுபதிப்பு/ செம்பதிப்புகளாக வெளியிட தநாபாநூகபகழகம் முடிவு செய்துள்ளது.
  • பொறியியல், மருத்துவம், கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல், விலங்கியல், உளவியல், மானுடவியல், அரசியல், வேதியியல், புவியமைப்பியல், புள்ளியியல், சட்டவியல், வணிகவியல், கூட்டுறவியல், வங்கியியல், வானியல், வரலாறு, மொழி, கல்வி உள்ளிட்டு இதுவரை கழகம் வெளியிட்டுள்ள 32 தலைப்புகள் கீழான புத்தகங்களில் பல புத்தகங்கள் பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டவை. அவற்றில் காலத்துக்கேற்ப புதுப்பிக்க வேண்டிய தேவை உணரப்படும் புத்தகங்கள், தொடர்புடைய துறைகளின் பேராசிரியர்கள், வல்லுநர்கள் உதவியுடன் தெரிவு செய்யப்பட்டு திருத்திய பதிப்பாக வெளியிடப்பட உள்ளன.
  • கழகத்தில் இதுவரை 32 பாடத்தலைப்புகளின் கீழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அவை வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இடைக்காலத்தில் ஏராளமான புதிய பாடங்கள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஏற்ப மாணவர்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் வகையிலும் உயர்கல்வி மாணவர்கள் தேவை கருதியும் புதிய பாடத்தலைப்புகள், துணைத் தலைப்புகளின் கீழ் நூல்களை வெளியிடவும் மொழிபெயர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • உயர் நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களுக்கு வெளியில் நுண் திறன்களை வளர்ப்பது தற்போது அவசியமாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பாடத்திட்டங்களுக்கு வெளியில் நுண் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் புத்தகங்களை எழுதி அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு வழங்கவும் நூலகங்களுக்கு வழங்கவும் கழகம் திட்டமிட்டுள்ளது.
  • நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களில் சிறந்த கருத்துகளைக் கொண்ட தமிழ் நூல்கள் சில வெளிச்சந்தைகளில் கிடைப்பதில்லை. அவற்றை மறு பதிப்பு செய்து லாப நோக்கு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்யவும், பொது நூலகங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நாமருத்துவம், பொறியியல், சட்டம், கலை, அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், தொடர்பியல், காட்சி ஊடகவியல் வணிக மேலாண்மை போன்ற துறைகளில் உயர்கல்வியில் தமிழ் வழிக்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அனைத்து உயர்கல்விக்கான ஆங்கிலம் வழிக் கல்விப் பாடத்திட்டங்களையும் தரமான மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர் குழுமூலம் சரிபார்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • நாமேலும், தமிழில் கடந்த காலத்தில் வெளியிடப்பட்டு தற்போது காணக்கிடைக்காத அரிய தமிழ் நூல்களைத் தேடிச் சேகரித்து அவற்றை மறுபதிப்பு செய்து மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
  • உலகளாவிய தமிழ் மக்களைச் சென்றடையும் வகையில் மின்னணுப் புத்தகங்களாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
  • குழந்தை இலக்கியம் தொடர்பாக நூல்கள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரவும், மேம்படுத்தவும் தேன்சிட்டு என்னும் பெயரில் ஒரு மாத இதழும், ஆசிரியர்களின் அனுபவங்களைப் பரவலாக்கவும் கற்பித்தல் அணுகுமுறைகளை மேம்படுத்தவும் கனவு ஆசிரியர் என்னும் பெயரில் ஒரு மாத இதழும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்விக் குழு - அலுவல் சாரா உறுப்பினர்கள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். இக்கழகத்திற்கான சட்ட அமைப்பு ஒன்று ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசின் கல்விக் கொள்கைக்கு இணங்க இக்கழகம் ஆற்ற வேண்டிய கல்விப் பணிகளை கொள்கை அளவில் திட்டமிட்டு வழிகாட்டி நடத்திடும் தலையாய பொறுப்புடைய நிர்வாக அமைப்பின் முதல் அங்கம் ஆளுநர் குழு ஆகும்.

ஆளுநர் குழுவின் இப்பணிக்குத் துணை நின்று, வேண்டிய ஆலோசனைகள் வழங்கிட இக்கழகத்தின் சட்ட அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள குழுக்களில் விதி 39(ii) ன் படி உருவாக்கப்பட்ட கல்விக்குழு முக்கியமானதாகும்.

இக்கல்விக்குழு பாடத்திட்டங்கள் மற்றும் மொழிகள் தொடர்பான துணைக் குழுக்கள் அமைக்கத் தேவைப்படும் வல்லுநர்கள் பெயர்களைப் பரிந்துரைக்கிறது.

தற்போது இக்கழகம் தொடக்க காலத்தில் வெளியீடு செய்த அரிய தமிழ் நூல்கள் மறுபதிப்பு செய்தல், கல்லூரி மாணவர்களுக்கு எளிதில் கிட்டாத அரிய நூல்கள், பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்பப் பட்டப்படிப்பைத் தமிழில் பயிலுவோருக்கான அடிப்படைப் பாடநூல்கள் தயாரித்தல், போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல்களைத் தமிழில் எழுதுதல் அல்லது மொழிபெயர்ப்பு செய்தல், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களில் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து அச்சிடுதல், நமது மொழியில் உள்ள தலைசிறந்த இலக்கிய நூல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து அச்சிடுதல், பிற மொழி இலக்கியநூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிடுதல் உள்ளிட்ட பல பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ள ஆளுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, இக்காலக்கட்டத்திற்கேற்ப பெருகி வரும் பணிகளுக்கு ஏற்றவாறு ஆளுநர் குழுவின் கீழ் செயல்படும் கல்விக்குழுவைச் சீரமைத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனடிப்படையில் இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20 முதல் 25 வரை அதிகரித்துக் கொள்ள நிகழ்ச்சிநிரல் 1/2017 ந.க.எண்.6163/அ/2017 Cir.Res.No.01/08.05.2017 மூலம் ஆளுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வல்லுநர்களை இக்குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்க ஆளுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பட்டியல் பின்வருமாறு

  1. பேராசிரியர். மு. அனந்தகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்,
    அண்ணாபல்கலைக் கழகம், சென்னை.
  2. பேராசிரியர். எ.பாலகுருசாமி, முன்னாள் துணை வேந்தர்,
    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
  3. திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஒடிசா.
  4. திரு. மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி ஆராய்ச்சியாளர்.
  5. பேராசிரியர். சிற்பி பாலசுப்பிரமணியம், கவிஞர்.
  6. திரு. ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆராய்ச்சியாளர்.
  7. திரு. எஸ். இராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
  8. திரு. ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்.
  9. திருமதி. வ. கீதா, மொழிபெயர்ப்பாளர், சமூகவியல் ஆராய்ச்சியாளர்.
  10. பேராசிரியர். ச. மாடசாமி, கல்வியாளர்
  11. திரு. ஆயிஷா நடராசன், கல்வியாளர்.
  12. திரு. பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர்.
  13. திரு. பூ.கொ. சரவணன், இ.வ.ப., எழுத்தாளர்.